ஒசாமாவின் கோட்டையை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக ஐஎஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஎஸ் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட ஆடியோ பதிவில், “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப்பகுதியில் ஐஎஸ் கொடி பறக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கிராமவாசிகளை அவர்களது இல்லத்திலேயே இருக்குமாறும் ஐஎஸ் இயக்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், “தாலிபன்களுக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே ‘தோரா போரா’ மலையைக் கைபற்றுவது தொடர்பாக கடும் சண்டை நடைபெற்றது. தோரா போரா மலையைக் கைபற்றியது யார் என்று உறுதிப்படுத்த முடியவில்லை” என்றனர்.

ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் ‘தோரா போரா’ மலைப் பகுதியைக் கைப்பற்றுவதில் ஐஎஸ் இயக்கத்துக்கும், தாலிபன்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ,