வட மாகாணத்தில் அடைமழையால் பல குடும்பங்கள் நிர்க்கதி!

வட மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அடைமழையால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
    
அந்தவகையில் வவுனியாவில் 03 குடும்பங்களை சேர்ந்த 11 அங்கத்தவர்களும், வவுனியா வடக்கில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 அங்கத்தவர்களும், தெற்கில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 03 அங்கத்தவர்களும், வெங்கலசெட்டிகுளத்தில் 08 குடும்பங்களை சேர்ந்த 35 அங்கத்தவர்களும் நான்கு பிரதேச செயலகங்களில் 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை வவுனியாவில் உள்ள அனேக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக திருநாவற்குளம், கூமாங்குளத்தின் சில பகுதிகள், மதுராநகர், நெடுங்கேணி போன்ற பிரதேசங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அதேவேளை, யாழ் மாவட்ட த்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில், நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளைகாரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் கள ஆய்வில் ஈடுபட்டனர் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!