தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயல் – சுமந்திரன்

உரிய நேரத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துவதானது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த கால இடைவெளிக்குள் தேர்தல்களை நடத்துவது என்பது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படை பண்பாகும். இவ்வாறான நிலையில‍ை மூன்று மாகாணங்களில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

எனவே அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு மேலும் காலதாமதப்படுத்தாது தேர்தலைகளை உடன் நடத்த வேண்டும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்த அனுபவத்துக்கு அமைய 50 க்கு 50 கலப்புமுறையில் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக எந்தவொரு கட்சிக்கும் ஸ்திரமான ஆட்சியை அமைக்க முடியாது. எனவே இந்த விகிதாசாரமானது 70 க்கு 30 ஆக மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில் 2017ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தல் சட்டத்தில் 17 ஆவது சரத்தை அரசாங்கம் நீக்கினால் மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த முடியும். தேர்தலை நடத்திய பின்னர் தேவையான நேரத்தை எடுத்து தேர்தல் மறுசீரமைப்புப் பற்றிக் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வரமுடியும்.

எனவே மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து இரண்டு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தாவிட்டால் 2017ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தல் சட்டத்தில் 17 ஆவது சரத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!