சீனாவில் பிஞ்சு குழந்தையின் உயிரை காப்பாற்ற விஞ்ஞானியாக மாறிய தந்தை!

அரிதிலும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது இரண்டு வயது குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான மருந்து உள்நாட்டில் கிடைக்காததால், வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து விஞ்ஞானியாக மாறிய கல்லூரிப் படிப்பை கூட படிக்காத தந்தை தனது சுயமுயற்சியின் மூலம் மருந்து தயாரித்து அவரின் குழந்தைக்கு அளித்து வருவது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை முடக்கிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ் பரவல், இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி, தனிமைப்படுத்திக் கொண்டு தங்கள் மக்களை தற்காத்து வருகின்றன. வைரஸ் பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்ட ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கேள்விப்பட்டு வருகிறோம்.

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது நாட்டில் எல்லைகள் மூடப்பட்ட நிலையில் உயிருக்காக போராடும் தனது குழந்தைக்காக மருந்து கிடைக்காததால் அதனை தானாகவே ஆய்வகம் அமைத்து தயாரித்து விஞ்ஞானியாக மாறியிருக்கும் வியக்குப்புக்குரிய நிகழ்வு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

சீனாவின் கும்மிங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சூ வெய், பள்ளிப் படிப்பை கூட தாண்டாத சூ வெய் சிறிய அளவிலான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் இரண்டு வயது ஆண் குழந்தையான ஹயோயாங், அரிதிலும் அரிதான மென்கெஸ் எனப்படும் மரபணு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான இயக்கத்தை அக்குழந்தையின் உடலால் செய்யமுடியவில்லை. பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இப்படியொரு அரிதிலும் அரிதான மரபணு நோய் ஏற்படும் எனவும், இந்த நோய்க்கு என எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அதிகபட்சமாக இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தை 3 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது எனவும் மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் மென்கெஸ் நோயின் அறிகுறிகளை copper histidine என்ற மூலப்பொருளால் குணப்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. ஆனால் இந்த மருந்து சீனாவில் கிடைக்கவில்லை, மேலும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சீனாவை விட்டு வெளியே சென்று மருந்து வாங்கி வருவதும் இயலாத காரியமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் எந்தவொரு தந்தையும் மனதளவில் தகர்ந்து போயிருப்பார்கள், ஆனால் சூ வெய் தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற மென்கெஸ் நோய் குறித்து இணையத்தில் கற்றறிந்தார். copper histidine என்ற வேதிப் பொருளால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்த சூ வெய், தனது வீட்டிலேயே இந்த மருந்தை தயாரிப்பது என முடிவெடுத்து வேதியியல் ஆய்வகம் ஒன்றையும் தனது வீட்டிலேயே அமைக்க முடிவெடுத்திருக்கிறார் சூ வெய்.

மிகவும் சவால்மிக்க இந்த மூலப்பொருளை உருவாக்குவது ஒன்றும் அத்தனை சுலபமில்லை. எனவே அவரின் உறவினர்களும், நண்பர்களும் சூ வெய்யின் முடிவு நடைமுறைக்கு சாத்தியப்படாதது என கூறி எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இதனை தன்னால் செய்ய முடியுமா இல்லையா என யோசித்து நேரத்தை வீணடிக்க விரும்பாத சூ வெய், இதனை தான் செய்தே ஆகவேண்டும் என முடிவோடு களம் இறங்கியிருக்கிறார்.

தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சூ வெய், இந்த மருந்தை தயாரிக்க தேவையான chloride dihydrate, histidine, sodium hydroxide உள்ளிட்ட வேதிப் பொருட்களை அரும்பாடுபட்டு வாங்கிவந்து இணையத்தின் மூலம் கற்றறிந்து copper histidine மருந்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் குழந்தைக்கு அந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் முன் முதலில் முயல் ஒன்றிற்கும், பிறகு தனக்கும் என அந்த மருந்தை சோதித்துப் பார்த்து பாதுகாப்புடன் தனது இரண்டு வயது மகனுக்கு கொடுத்திருக்கிறார் சூ வெய்.

இந்த மருந்தை தினமும் கொடுத்து வந்த நிலையில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் ஒரு சில வாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது தெரிந்து சூ வெய் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். இன்று தனது குழந்தைக்கு தான் உருவாக்கிய மருந்தை மட்டுமே அளித்து வருகிறார் அவர். மனம் தளறாமல் கற்பனைக்கு எட்டாத காரியத்தை செய்து முடித்து தனது மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக விஞ்ஞானியாக மாறியிருக்கும் சூ வெய்யை பலரும் பாராட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!