வேலூர் சிறையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதம்: – நளினியின் உடல்நிலை பாதிப்பு

வேலூர் சிறையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறை அலுவலர்கள் மற்றும் வார்டன்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நளினியை துன்புறுத்துவதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.இதனால் தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி கடந்த 12ம் திகதி கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் மனு அளித்துள்ளார்.அவர் மனுவை பெற்றுக் கொள்ளாததால் நளினி கடந்த 13ம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து 14ம் திகதி மனுவை பெற்றுக் கொண்டார், எனினும் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தை தற்போதைய முதல்வர் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: , ,