அச்சுறுத்தும் புதியவகை கொரோனா: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஓமைக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், உலக நாடுகளில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம், எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர். அதேபோல், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா குறித்தும் அதன் தீவிரத்தன்மை, இந்த வைரசால் இந்தியாவில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவை பற்றியும் அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய வகை கொரோனா பரவுவதால் முனைப்புடன் செயல்பட வேண்டியதற்கான அவசியம் குறித்து அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் மோடி, மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக வேண்டியதற்கான அவசியம் மற்றும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்றுவது குறித்தும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தல் மற்றும் ஆபத்து அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்த பிரதமர் மோடி, சர்வதேச பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கும் திட்டம் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!