பசுமைச் செயலணியில் உர வியாபாரிகள்!

பசுமை விவசாயத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஜனாதிபதி நியமித்திருக்கும் ஜனாதிபதி செயலணியில் அதிகமானவர்கள் விவசாய உர வியாபாரிகள். அவர்களை நியமித்ததன் மூலம் ஜனாதிபதியின் இயலாமை வெளிப்பட்டிருக்கின்றது. அத்துடன் 6 இட்சம் ஹெக்டயர் நிலத்தில் விவசாயம் செய்திருக்கும் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை அரசாங்கம் எப்போது வழங்கப்போகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.
  
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“ அரசாங்கம் இரசாயன உரத்தை தடைசெய்து விடுத்திருந்த வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு இரசாயன உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதாக அரசாங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த வர்த்தமானி அறிவிப்பு வாபஸ்பெறப்படவில்லை.

அத்துடன் இந்த காலப்பகுதியில் 6 இலட்சம் ஹெக்டயரில் விவசாயம் செய்யப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். அப்படியாயின் 6 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் களைகளை அழித்துவிட கிருமிநாசினி நாட்டில் இல்லை.

6 இலட்சம் ஹெக்டயர் விவசாய நிலத்தில் களைகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு 31 இலட்சம் மனித நாட்கள் தேவைப்படுகின்றன. அதனால் இது சாத்தியமில்லை.
அத்துடன் இரசாயன உரத்தை கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இதுவரை வெளியிடாத நிலையில், உரம் கொண்டுவந்து விநியோகிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள்வரை செல்லும். தனியார் துறையினரே உரம் கொண்டுவர இருக்கின்றது. அதனால் தற்போது விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்துக்கு உரம் கிடைக்கப்போவதில்லை.

அதேபோன்று காெண்டுவரப்படும் உரம் எத்தனை ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரியாது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் டொலர் பற்றாக்குறை மற்றும் இறக்குமதியாளர்களின் செலவு என அனைத்தையும் பார்த்தால் இரசாயன உரம் ஒரு மூடை 10 ஆயிரம் ரூபாவரை செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் விவசாயிகள் 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்துவந்த உரம் தற்போது ஆயிரம் ரூபாவுக்கும் பெற்றுக்கொன்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தாலும் தேவையான உரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. விவசாயிகளின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன. அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் காரணமாக விவசாயிகள் அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்துள்ளனர்.

உரம் கொண்டுவருவதற்கு சுமார் 2 மாதங்கள் வரை செல்லுமானால் அதுவரை விவசாயிகளின் பிரச்சினைக்கு என்ன தீர்வு. அவர்களின் விவசாயம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா? ஏனெனில் சேதன பசளையினால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டால் நஷ்டஈடு வழங்குவதாகவே அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அப்படியானால் விவசாயிகளின் நிலை என்ன?
அத்துடன் பசுமை விவசாயத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி, 14பேர் காெண்ட ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்திருக்கின்றார். இவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் 14பேரில் ஒருசிலரே சேதன பசளை தொடர்பான நிபுணர்களாக இருக்கின்றனர்.

மற்றையவர்கள் அனைவரும் அதுதொடர்பான வியாபாரிகள். வியாபாரிகளை நியமித்துக்கொண்டு பசுமை விவசாயத்தை நாட்டில் ஏற்படுத்த முடியுமா.

ஜனாதிபதியின் இந்த செயலணியின் மூலமே ஜனாதிபதிக்கு முடியாது என்பது உறுதியாகி இருக்கின்றது. அதேபோன்று 2017இல் சீ.ஐ.சீ. நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட உரம் தரம் குறைவு என களஞ்சியப்படுத்தட்டிருந்த 1700 மெட்ரிக் தொன் உரத்தை இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு விநியோகித்திருக்கின்றது.

விவசாயிகளை சிறுநீரகத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, தரம் குறைந்த உரத்தை விவசாயிகளுக்கு வழங்கி இருக்கின்றது. அதேபோன்று நனோ நைட்ரிஜன் உரம் கொண்டுவருவதிலும் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கின்றது. எமது விவசாய பூமிகளுக்கு இந்த உரம் பொருத்தமா என பரீட்சித்து பார்க்காமலே நைட்ரிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த உரத்தை பயன்டுத்திய விவசாயிகளின் பயிர்களுக்கு போதுமான போஷணை கிடைக்கவில்லை என்றே எமக்கு தெரியவந்திருக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!