கட்சியின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது! மைத்திரி தரப்பு விடுத்துள்ள அழைப்பு

கட்சியுடன் முரண்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்ற அனைவரும் கட்சிக்குள் மீண்டும் திரும்பி வருவதற்காக கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake)தெரிவித்துள்ளார்.

இதனால், கட்சியை விட்டு சென்ற அனைவரும் தமது தாய் வீட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பவர்களுக்கும் தமது தாய் வீடு எது என்பது நினைவில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் மிகிந்தலையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபையின் கூட்டத்தில் உரையாற்றும் போதே துமிந்த திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துச்சம் என மதிக்கின்றனர். இவர்கள் எவராலும் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அளவுக்கு நாட்டிற்கு வெற்றிகளை தேடி கொடுத்த கட்சி எதுவுமில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவே மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு போர் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக மாத்திரமல்லாது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டணிக் கட்சியாக பொதுஜன பெரமுனவுக்குள் வந்தது.

உடன்படிக்கையில் கையெழுத்திட்டே கட்சி கூட்டணிக்குள் சென்றது. இதனால், அரசாங்கத்திற்குள் இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனித்து அரசியலில் ஈடுபடும் உரிமையுள்ளது.

இந்த உரிமையை எவரும் தடுத்து விட முடியாது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் எவரும் தடுக்க முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!