பெண்கள் தொடர்பிலான திஸ்ஸ குட்டியாராச்சி எம்பியின் கருத்து ஒரு காட்டுமிராண்டி நடத்தை: மனோ கணேசன்

தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர்.

ஆகவே பெரும்பான்மையினரான பெண்களை அவமானப்படுத்தி விட்டு, இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கண்டிக்க இன, மத, மொழி, அரசியல் பேதங்களைகளை மறந்து ஒன்றுபடுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னவுக்கு எதிராகப் பெண்ணின வெறுப்பு மற்றும் அருவருக்கத்தக்கக் கருத்துகளை, அரசு தரப்பு எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சி(Thisakutti Arachchi) பகிரங்கமாகச் சபையில் பிரயோகித்துள்ளார்.

இந்நாட்டுப் பெண்களை அவமானப்படுத்தும் முகமாகச் சபையில் சொல்லப்பட்ட இக்கருத்துகளை, நாடாளுமன்ற பெண்கள் ஒன்றிய அமைப்பின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபிள்ளை(Sudarshini Fernandopulle) மற்றும் எதிரணி எம்.பி தலதா அதுகோரள ஆகியோர், அரசு, எதிரணி பேதங்களுக்கு அப்பால் சென்று கடுமையாகக் கண்டித்து தமது உரிமைக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மாத்தளை மாவட்ட எம்.பி ரோகினி குமாரி விஜேரத்ன(Rohini Kumari Wijerathna) உரிமை கோரிக்கை எழுப்பி, தன்னையும், இந்நாட்டுப் பெண்களையும் நிமிர்ந்து நின்று மகிமைப்படுத்தியுள்ளார்.
அருவருக்கத்தக்க விதத்தில், பெண்களை அவமானப்படுத்துவதும் பின்னர் அவற்றை விளையாட்டு, கேலி, கிண்டல், அரசியல் என்ற பெயர்களில் மூடி மறைப்பதும், நமது சமூகத்தில் வழமையாக நடைபெறுகிறது. இதுவே அன்று அரசு தரப்பு எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சி(Thisakutti Arachchi) வாயிலிருந்தும் நாடாளுமன்ற சபையில் வெளிப்பட்டது.

தனிப்பட்ட உரையாடல்களில் இத்தகைய கருத்துகள் கூறப்படுவதையும்கூட அங்கீகரிக்க முடியாது. ஆனால், சிலவேளைகளில் அவை தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவோரின் நட்பு நடத்தைகளாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கும் இன்றைய நவீன பெண்கள் முறையாக உரிய பதிலடிகளை அளிக்கின்றனர்.

ஆனால், இவை பகிரங்கமாக, அதுவும் நாட்டின் அதியுயர் நாடாளுமன்ற சபையில் கூறப்படும்போது, நிலைமை வரம்பு மீறுகிறது. அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

இன்று நாடாளுமன்ற பெண்கள் ஒன்றிய பெண் எம்.பி உறுப்பினர்களும், நன்னடத்தை கொண்ட அனைவரும் இத்தகைய செயல்களைக் கண்டித்திருப்பது, இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களை உலுக்கி விட்டு அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ஆகவே இந்த சம்பவம் நல்விளைவை ஏற்படுத்தி உள்ளதாகவே நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!