ஜனாதிபதியின் கருத்துக்கு ஐதேக கண்டனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி , ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலோ அவ்வாறானதொரு விடயம் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட இந்த கருத்தானது ஜனநாயக கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். இது நீதிமன்றத்துறைக்கும் , அரசியலமைப்புசபைக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் புதிய களனி பாலத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்த கருத்தினை நிராகரித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.தே.க. இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டமான அதிவேக நெடுஞ்சாலையின் புதிய களனி பால நுழைவினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசிய கட்சி நிராகரிக்கிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமரோ அல்லது முன்னாள் அமைச்சரவையோ பொறுப்பு கூற வேண்டும் என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலோ தெரிவிக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய தேவையற்றவர்களினதும், அது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு அற்றவர்களினதும் குடியுரிமையை சட்டத்தின் ஊடாக நீக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் பரிந்துரையாகவுள்ளது. இது ஜனநாயக கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். இது நீதிமன்றத்துறைக்கும் , அரசியலமைப்புசபைக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும்.

அத்தோடு இது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் உறுப்ரைகளை மீறும் செயற்பாடாகும். ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்தானது அரசியலமைப்பை பாதுகாப்பதாக அவர் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்தினை மீறும் வகையிலேயே அமைந்துள்ளது.

இவ்வாறான கருத்து வெளிப்பாட்டு பின்னணியுடன் அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் குறித்த மெய்நிகர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படாமை புதுமையான விடயமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!