சம்பந்தனின் பதிலைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அனுக்கும் கடிதத்துக்கு அவர் பதில் தரும் வரைக்கும் தன்னால் எதனையும் கூற முடியாது என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலமைச்சரை அவரது வீ்ட்டில் நேற்று சந்தித்திருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று இரவு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. அதன்படி, ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, சம்பந்தனுக்கு பதில் கடிதம் தயாரித்துள்ளேன். அதை இன்று அனுப்பவுள்ளேன்.

நாங்கள் அனுப்பும் கடிதத்திற்கு சம்பந்தன் தரும் மறுமொழியி்ல் இருந்து தான் என்னவிதமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்பது தெரியவரும். ஆகவே சம்பந்தனின் பதில் வரும் வரைக்கும் என்னால் எதுவும் கூற முடியாது. அமைச்சர்கள் டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தால் நான் அதனை ஏற்றுக் கொள்ளத்தயாரா இருக்கிறேன் என்றார்.

Tags: ,