குற்றவாளிகளுக்கும் நிரபராதிகளுக்கும் தண்டனை விதிப்பது நியாயமா? – சத்தியலிங்கம் கேள்வி

முதலமைச்சரினால் குற்றவாளிக்கும், நிரபராதிக்கும் வழங்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அறிக்கையில் இரண்டு அமைச்சர்கள் குற்றவாளிகள், இரண்டு அமைச்சர்கள் நிரபராதிகள் என்று கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரினால் குற்றவாளிக்கும், நிரபராதிக்கும் வழங்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது. இந்த விசாரணைக்குழு முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு. அவருக்கு அந்த விசாரணைக்குழு முழுமையான ஒரு அறிக்கையை வழங்கியுள்ளது.

ஏன் இந்த விசாரணைக்குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் அந்த விசாரணைக்குழுவினுடைய அறிக்கையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அந்தக்குற்றம் செய்ததாக கூறப்படுகின்ற இரு அமைச்சர்களுக்கு தண்டனை வழங்குவதுபோல குற்றவாளிகள் இல்லை. இந்த விசாரணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் என்ன காரணம் அப்படி ஒரு மாதகாலம் கட்டாய லீவு தேவை ஏற்பட்டால் கட்டாய லீவை நான் மேலும் நீடிப்பேன் என்ற ஒரு நிபந்தனையுடன் என்னுடைய அமைச்சினுடைய முழுப்பொறுப்பையும் என்னுடைய செயலாளரூடாக தான் நிர்வகிப்பேன் என்று என்னத்திற்காக முதலமைச்சர் கூறினார்.

அவர் ஒரு நீதியரசர். எங்களை விசாரித்தவர்கள் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள். அந்த இரண்டு நீதிபதிகளுடைய அறிக்கையை ஏற்காமல் இப்படி ஒரு மாறான முடிவை முதலமைச்சர் எடுப்பதற்கு யார் அவரை துண்டினார்கள்? அல்லது யார் அவரை பிழையாக வழிநடத்தினார்கள்? என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கின்றது. ஆகவே தான் அந்த அவையிலிருந்து நான் வெளிநடப்புச் செய்தேன். அதிலிருந்துதான் அனைத்துப் பிரச்சினைகளும் ஆரம்பித்தது. எனக்கு எதிராக கொண்டவரப்பட்ட அறிக்கை உள்நோக்கம் கொண்டது. என்னை பழிவாங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவே கருதுகின்றேன்.

அதைவிட மேலே சென்று முதலமைச்சர் ஒருவிடயத்தைச் சொன்னார். மத்திய அமைச்சர்களுடன் நாங்கள் சென்று நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் ஒரு விடயத்தைச் சொன்னார். எங்களுடைய மாகாணசபை அமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருக்கின்ற சொற்ப அதிகாரங்களோடு 30வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு நிதிப்பலமோ, ஆள்பலமோ வடமாகாணசபையில் இல்லை.மத்திய அமைச்சின் உள்ளூராட்சி அமைச்சிற்குக்கீழ் இருக்கின்ற ஒரு சபையே வட மாகாண சபை. இந்த மகாண சபை மத்திய அரசாங்கத்தின் உறுதுணை இல்லாமல் சுயமாக எழுந்து நிற்கக்கூடிய ஒரு சபை இல்லை.

இது ஒரு அரசாங்கம் அல்ல. ஆகவே தான் நாங்கள் மத்திய அரசாங்கத்தினுடைய சுகாதார அமைச்சரோடு நான் தொடர்புகளை ஏற்படுத்தி என்னுடைய தனிப்பட்ட தேவைகளைச் செய்யவல்ல. எமது மாகாண மக்களுக்குத் தேவையான வேலைத்திட்டங்களைக் கொண்டு வருவதற்கே. இதேவேளை குற்றஞ்சாட்டப்பட்ட இந்தக்குற்றச்சாட்டுக்களில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் உள்ளன என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,