இளையராஜாவின் இசைக்கு நான் நிரந்தர அடிமை: – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம், மேற்குத்தொடர்ச்சி மலை. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணன், அபு வளையாங்குளம், ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், அரண்மனை சுப்பு, செல்வமுருகன், ரமேஷ், மாஸ்டர் சுமீத் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, தேனி ஈஸ்வர். இசை, இளையராஜா. பாடல்கள், இளையராஜா, யுகபாரதி. இயக்கம், சுசீந்திரன் உதவியாளர் லெனின் பாரதி. படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது:

மேற்குத்தொடர்ச்சி மலை கதையை 2013ம் ஆண்டு லெனின் பாரதி சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது என்றாலும், படம் தயாரிக்க போதுமான பணம் என்னிடம் இல்லை. ‘பணம் சம்பாதித்த பிறகு படத்தை தயாரிக்கிறேன்’ என்று சொன்னேன். அவரும் என் வார்த்தையை நம்பி 4 வருடங்கள் காத்திருந்தார். எங்கள் கனவும், லட்சியமும் இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. சாதாரணமான மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாகியிருக்கிறது. ஒரு சிட்டுக்குருவியின் கூடு போல் வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறான், ஹீரோ. ஆனால், அவனைச் சுற்றியிருக்கும் அரசியல் மற்றும் சுயநல மனிதர்களால் அவன் என்ன ஆகிறான்? அவன் கனவு நிறைவேறியதா என்பது கதை. படத்தில் நடித்துள்ள அனைவரும் அந்தந்த மலைப்பகுதி கிராமத்து மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசைக்கு நான் நிரந்தர அடிமை. இப்போது கூட காரில் நீண்ட தூரம் செல்லும்போது, அவர் இசையில் உருவான பாடல்களைத்தான் கேட்பேன் என்றார்.

Tags: ,