விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளுங்கள் – யாழ். ஆயர், நல்லை ஆதீனம் கூட்டாக கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளியாமல், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் தமது பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று நல்லை ஆதீன குரு முதல்வரும், யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோருக்கு நேற்று அனுப்பி வைத்த கடிதம் ஒன்றிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

”வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக, மக்களின் நன்மை கருதி பின்வரும் ஆலோசனையை தங்களிடம் முன்வைக்கலாம் எனக் கருதுகிறோம்.

விசாரணையின் போது, குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும், மீண்டும் தமது அமைச்சர் பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

அவர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இடையூறுகளின்றி ஒத்துழைப்பதுடன், பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைமைகளும் விசாரணைகளை சரியாக நடதா்துவதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இதன் மூலமே வடக்கு மாகாண சபையில் நல்லாட்சியைக் கொண்டு வர முடியும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாணசபையை திறம்பட இயக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெற்று அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளியாமல், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் தமது பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

யாழ். ஆயர் மற்றும் நல்லை ஆதீனத்துடன், இரண்டு தரப்புகளும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி தமது நிலைப்பாடுகளை விளக்கியிருந்த நிலையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். ஆயரும், நல்லை ஆதீன குரு முதல்வரும் இன்று காலை முதலமைச்சர் விக்னேஸ்வரனையும், தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவையும் அவர்களின் இல்லங்களில் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Tags: ,