அமைச்சர்களை கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தமாட்டேன் – சம்பந்தனுக்கு விக்கி கடிதம்

விசாரணைக்குழுவினால் குற்றம்சுமத்தப்படாத இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தமாட்டேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

“அன்புக்குரிய சாம்” என்று விழித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் ஆங்கிலத்தில் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

‘17.06.2017 நாளிடப்பட்ட உங்களின் கடிதம் கிடைத்தது. நன்றி.

இன்று காலை யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமி ஆகியோரின் குறிப்பும் கிடைத்தது. முதலில் ஒரு விளக்கம்.

சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் தமது ஊதியம், வாகனம் மற்றும் ஏனைய வசதிகளைப் பெறும் உரிமை உள்ளது.

விசாரணை அமர்வு நடைபெறும் போது, சாட்சிகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் விடுப்பில் செல்ல வேண்டும் என்றே உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்த விடயத்தில் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாக உங்களால் உத்தரவாதம் அளிக்க இயலவில்லை என்பதை புரிந்து கொள்கிறேன்.

ஆனால் சுதந்திரமான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திரமான விசாரணையை உறுதிப்படுத்தவே அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் முறைமையை வரைந்தேன்.

நீங்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். சுதந்திரமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது என்று குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் நீங்கள ஆலோசனை கூற வேண்டும்.

நீதி விசாரணையில் தலையீடு செய்யாமல், இரண்டு அமைச்சர்களும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இரண்டு மதத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் மதிப்புக்குரியவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோரும் நேற்று என்னைச் சந்தித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருவரும் நீதி விசாரணைகளில் தலையீடு செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை விடுப்பில் அனுப்பும் நிபந்தனையை வலியுறுத்தப் போவதில்லை.” என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள், நல்லை ஆதீனம், யாழ். ஆயர், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டவாளர் கனகஈஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Tags: