நாட்டில் நாளாந்தம் மின்தடை அமுலாகும் -உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் முழுமையாக வழமையான முறையில் இயங்கும் வரை நாளாந்தம் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 4 நாட்களுக்கு குறித்த மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு இன்றைய தினத்தில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சார சபை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

அத்துடன், ஏனைய 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு இணைப்பதற்கு மேலும் 3 நாட்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முற்பகல் 11.30 முதல் 6 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

நாட்டின் பிரதான மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், நேற்று மாலை 5.30 அளவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியிருந்ததுடன், ஏனைய பகுதிகளில் நள்ளிரவு அளவில் மின் விநியோக நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்குத் திரும்பியிருந்ததாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், மின் விநியோகத் தடை காரணமாக தடைப்பட்டிருந்த நாட்டின் நீர் விநியோக நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுக்குள் வழமைக்குக் கொண்டு வரப்பட்டதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!