இலங்கையில் உளவுத்துறை உசார்!

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இலங்கையில் உளவுத் துறையினர் உசார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி குறுகிய நோக்கங்களுக்காக அசம்பாவிதங்களை தோற்றுவிக்க எவரேனும் முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில், உளவுத் துறையினர் ஊடாக உரிய தகவல்களைப் பெற்று, அவ்வாறான நாசகார செயல்களை முறியடிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு விஷேட அறிவித்தலை விடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் நாட்டுக்கு எடுத்து வரப்படும் நிலையில், குறுகிய சிந்தனை கொண்டவர்கள் நாசகார செயல்களில் ஈடுபட முயல்கின்றனரா என்பதை உளவுத் துறையூடாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு கண்டிப்பான ஆலோசனையை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் நாடளாவிய ரீதியில் உளவுத் துறையினர் உசார் செய்யப்பட்டு, இது தொடர்பில் போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!