மொட்டு எம்.பிக்களுடன் மஹிந்த, பசில் தனியாக ஆலோசனை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் பிரதமருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.
அலரி மாளிகையில் மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் நள்ளிரவு வரை நீடித்ததுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு விருந்தும் வழங்க பிரதமர் ஏற்பாடு செய்திருந்தார்.

மொட்டுவில் உள்ள சுமார் 15 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் பசில் ராஜபக்ச சுமார் 40 நிமிடங்கள் உரை நிகழ்த்தியமை மிக முக்கியமான நிகழ்வாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் தம்மீது குற்றம் சுமத்தினாலும் பின்வாங்கப் போவதில்லை எனவும், அனைவரும் ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வது அவசியமானது எனவும் பசில் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்குச் செல்லும் போதும் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் நினைவுக்கு வருவதாகவும் ஆனால் அவை அனைத்தையும் மறந்து விடுவதாகவும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

எனவே அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக முன்னோக்கி செல்ல வேண்டும் என நிதியமைச்சர் கூட்டத்தில் தெரிவித்தார். அபிவிருத்தி மாத்திரம் தேர்தலில் வெற்றியடையாது எனவும் அவ்வாறாயின் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றிபெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் அமைச்சர் பதவி வழங்கப்படாமை தொடர்பில் திருமதி கீதா குமாரசிங்க மாத்திரம் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு உணவுக்கு கூட செல்லாமல் அவர் வெளியேறியமை பின்னர்தான் தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!