“ஒரு அதிகாரி கூட தப்ப முடியாது” – நீதிமன்றம் எச்சரிக்கை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர்நிலை புள்ளிவிவரங்களை சேகரித்துவருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த நீதிபதிகள், எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விபரங்களை தான் அரசிடம் கேட்டோம்… ஆனால் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது என அதிருப்தி தெரிவித்தனர்.
57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் 8797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி, சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரையும் மன்னிக்க முடியாதெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வெறுமனே அறையில் உட்காரத்தான் சம்பளம் வழங்கப்படுகிறதா என காட்டமாக கேள்வி எழுப்பியதோடு தவறிழைத்த அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரித்தனர்.

முதலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட வேண்டி வரும், இரண்டாவது முறையும் இது தொடருமானால் ஊதியத்தை நிறுத்த உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகள் செய்யும் தவறுக்காக அரசை குறை கூற முடியாதென தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!