காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோரின் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக வாதங்களை முன்வைக்க, காணாமல் போன 11 இளைஞர்களின் பெற்றோருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதாக குற்றம் சுமத்தி, தனக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை இடை நிறுத்தி இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு எதிராக வாதங்களை முன்வைக்கவே மேன்முறையீட்டு நீதிமன்றம் காணாமல் போன இளைஞர்களின் பெற்றோருக்கு இன்று அனுமதி வழங்கியது.

கரன்னாகொடவின் மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகேவின் வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.

மனு சம்பந்தமான எதிர்த்தரப்பு வாதங்களை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முன்னர் தாக்கல் செய்யுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்களை கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தனக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்தி தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கரன்னாகொட மனு தாக்கல் செய்துள்ளதுடன் அதில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ரீட் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள தரப்புக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும், கரன்னாகொட தனது மனுவில் கோரியிருந்தார்.

11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை அல்லது கொலை செய்யப்பட்டமை சம்பந்தமான விசேட மேல் நீதிமன்றம், முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.
அன்றைய மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித ராஜகருண ஆகியோர் இந்த தடையுத்தரவை பிறப்பித்திருந்தனர்.

வசந்த கரன்னாகொட தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த தடையுத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கரன்னாகொட சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோர் முன்னிலையாகினர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நெரின் புள்ளே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகினார். இந்த மனு மீதான விசாரணைகளை நீதியரசர்கள் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!