அரசு சமர்ப்பிக்காத அமெரிக்காவுடனான உடன்படிக்கையை சபையில் சமர்ப்பித்த அனுரகுமார

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக இலங்கை அரசுக்கும் அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க,(Anura Kumara Dissanayake) இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உடன்படிக்கையையே தான் இவ்வாறு சமர்ப்பிப்பதாக அவர் கூறியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் நிதிமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனத்துடனான இந்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அரசாங்கமோ, மின் சக்தி அமைச்சோ அதனை செய்யவில்லை.

அமைச்சரவையில் கூட இந்த உடன்படிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த உடன்படிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டுள்ளது. இரண்டு தரப்பின் இணக்கமின்றி, உடன்படிக்கையை நாட்டுக்கோ, மக்களுக்கோ வெளியிடக் கூடாது என்ற ஷரத்தும் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டின் சொத்து சம்பந்தமான விடயத்தில் இப்படி செயற்பட முடியுமா என கேள்வி எழுப்புகிறேன்.

நாட்டில் உள்ள சொத்துக்களுக்கான உரிமை நாட்டு மக்களே உள்ளது. நாட்டின் சொத்துக்கள் நிதியமைச்சருக்கோ அல்லது நிதியமைச்சின் செயலாளருக்கோ பகிரப்படவில்லை. இதனால், நாட்டின் சொத்துக்கள் பகிரப்படுவது சம்பந்தமான தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த உடன்படிக்கையின் பிரதியை வழங்குமாறு பல முறை கோரப்பட்டது போதிலும் கிடைக்கவில்லை. இதனால், நாட்டின் பொதுமக்களும், நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களும் அறிந்துக்கொள்வதற்காக இந்த உடன்படிக்கையை நான் நாடாளுமன்ற அவையில் சமர்ப்பிக்கின்றேன் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!