முடிவுக்கு வந்தது ஒரு வருட போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.
    
விவசாயிகள் போராட்டம், தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் தற்காலிகமாக கைவிட முடிவு விவசாயிகள் செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி கூறுகையில்,

ஜனவரி 15-ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவோம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லி-அரியானாவில் உள்ள சிங்குவில் விவசாயிகள் தங்கள் போராட்ட தளத்தில் கூடாரங்களை அகற்றத் தொடங்கி உள்ளனர். நாங்கள் எங்கள் வீடுகளுக்கு புறப்பட தயாராகி வருகிறோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் நாளை மறுநாள் அவரவர் ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எல்லைகளில் அமைத்திருந்த தங்களது கூடாரங்களை அவர்கள் அகற்றி தாங்கள் கொண்டு வந்த பொருட்களை டிராக்டர் மூலம் ஏற்றி செல்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!