தோல்விக்கு பொறுப்பேற்று கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், மாவை, சுமந்திரன் பதவி விலகுவார்களா?

ஜனநாயகத்தின் உயரிய விழுமியமாகவும், கூர்முனையாகவும் அமைவது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகும். அவ்வாறு பதவி விலகும்போது மற்றவர்களுக்குப் பொறுப்பு உணர்வு இயல்பாகவே ஏற்படும். அது தோல்வியிலிருந்து மீண்டு எழுந்து வெற்றியின் பக்கம் செல்வதற்கான புதிய வழிகளை அவர்கள் கண்டுபிடிக்க உதவும் அல்லது கண்டு பிடிக்க முயற்சிப்பார்கள். இதன் மூலம் புதிய ஆளுமைகள் பல முனைகளிலிருந்தும் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதே இதனுடைய அடிப்படைத் தத்துவமாகும்.

தோல்விக்குப் பொறுப்பேற்றல் என்பது ஜனநாயகத்தின் உயரிய விழுமியமும், நாகரிகமுமாகும். அது ஒரு மனிதனின் பொதுவாழ்வில் தனக்கு இருக்கின்ற பொறுப்புக்களையும், பண்பாட்டையும், உயரிய சமூகப் பொறுப்பையும், முன்னுதாரணத்தையும் வெளிக்காட்டி நிலைநிறுத்தும். அத்தோடு மற்றவர்களுக்கு உயர்ந்த வழிகாட்டியாகவும் அமையும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் புதிய செல்வழி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தற்போது வரலாறு தமிழ் தலைமைகளிடம் கையளித்து இருக்கிறது.

உலகின் ஜனநாயக பண்பியல் வரலாற்றில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியவர்கள் என்ற பட்டியல் மிக நீண்டது. அது ஜனநாயக நாடுகளிலும் சரி, கூடவே இராணுவ ஆட்சியாளர்களாக இருந்தவர்களும் அத்தகைய முன்னுதாரணங்களைக் கொண்டிருப்பதை எம் கண்முன்னே காண்கிறோம். “”ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு இல்லையேல் பதவி விலகுவோம்””. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பல முறை பகிரங்கமாகப் பத்திரிகைகளுக்கும், காணொளி நேர்காணல்களுக்கும் செவ்விகள் வழங்கியிருப்பதை இணைய வழியாகவும், இலத்திரனியல் ஊடகங்களிலும் இன்றும் யாவரும் பார்க்க முடியும்.

இவ்வாறு சுமந்திரன் குறிப்பிடுவது போலவே திரு. சம்பந்தனும் “தைப் பொங்கலுக்கு முன் தீர்வு, தீபாவளிக்கு முன் தீர்வு, வருட இறுதிக்குள் தீர்வு” எனக் கடந்த 12 வருடங்களாக ஓயாது இத்தகைய வாக்குறுதிகளை வாய்கூசாமல் சொல்லி வருவதைப் பார்த்து தமிழினம் சலிப்படைந்து போய் கிடக்கிறது. இவ்வாறு இவர்கள் வாக்குறுதிகளை வழங்கினாலும் இவர்கள் கடந்த காலத்தில் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு குண்டுமணியைத் தானும் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. மாறாக தனக்குக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காலத்தைக் கழித்து பதவிக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பதிலேயே காலத்தைக் கடத்தி விட்டார். இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகவும் இல்லை. இப்படியான ஒரு ஜனநாயக முறைமை இருக்கின்றது என்பதைக்கூட அவர் மனதில் எழுந்திருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

அவ்வாறு சுமந்திரனும் “”இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு வரும் இல்லையேல் பதவி விலகுவேன்”” எனக் காணொளியில் சத்தியம் செய்தார். ஆனால் அத்தகைய ஒரு தோல்விக்குப் பொறுப்பேற்கும் மனப்பக்குவம் அவரிடம் சிறிதும் கிடையாது என்பதை தற்போது அவர் எடுத்துவரும் அரசியல் முனைப்புக்கள் சான்று பகர்கிறன. தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல் தங்களைச் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று சிறிதும் வெட்கமின்றி பேசுவது மிகவும் அநாகரீகமான மானரோசமற்ற செயல். அது அவருடைய தன்மானத்துக்கு பெரும் இழிவானது.

இதனைக்கூட இவர்கள் புரியாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது. இவர்களைப் போலவே மாவை சேனாதிராஜாவும் எந்தக் குற்ற உணர்வும் அற்று மேடைகளில் முழங்குவதைக் காணமுடிகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட மாவை சேனாதிராஜா மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி அடைந்திருக்கிறார். தான் தலைமை தாங்கி வழி நடத்தும் கூட்டமைப்பு என்கின்ற முகமூடி அணிந்திருக்கும் தமிழரசுக் கட்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி அடைந்து இருக்கும் நிலையில் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற பதவியை தன்னுடைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும்.

ஆனால் அவரோ தொடர்ந்து அந்தப் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தலைவர் நாற்காலியில் குந்தியிருப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்பது வெட்கம் கெட்ட செயல். தோல்விக்குப் பொறுப்பேற்பது என்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் அற்றவர்களாக இவர்கள் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் உயரிய பண்பாட்டுக்கும், விழுமியத்திற்கும், பொறுப்புணர்வுக்கும் தீங்கான செயலாகும்.இது எதிர்கால சந்ததியினரைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்ற தவறான அரசியல் நடத்தை என்கின்ற நச்சு விதைகளை விதைக்கின்ற செயலாகவுமே அமையும்.   
இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவிவிலகல் என்ற ஜனநாயக பண்பையும் முறைமையையும் தென்னாசிய அரசியல் பண்பாட்டில் பார்ப்போமேயானால் இந்தியாவின் முன்னாள் பிரதமராக விளங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நேரு காலத்தில் இந்தியாவின் முக்கியமான அதாவது ஆறாவது பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவி ஆகிய ரயில்வே அமைச்சராகப் பதவியில் இருந்த காலத்தில் [ 1) பிரதமர், 2) உள்துறை அமைச்சர், 3) பாதுகாப்பு அமைச்சர், 4) வெளி விகார அமைச்சர் , 5) நிதி அமைச்சர், 6) ரயில்வே அமைச்சர்]

ரயில்வே போக்குவரத்து விபத்தொன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தபோது அந்த தவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார். அப்போது பலரும் அவரை பதவி விலக வேண்டாம் என வற்புறுத்திய போதும் அவர் பதவி விலகினார். அவ்வாறு 1962ல் சீன-இந்திய யுத்தத்தின்போது அமைச்சராகவிருந்த கிருஷ்ணமேனன் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்றார்.
அவ்வாறு இந்திரா காந்தி அவர்களின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த வி பி சிங் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை டிசம்பர் 31ம் திகதிக்குள் முற்றாக அடக்கி விடுவேன் என வாக்குறுதி அளித்தார். அவ்வாறு அந்த காலக்கெடு முடிவடைந்த அன்று பேட்டி வழங்கிக் கொண்டிருக்கின்ற போதே சாம்பல் பள்ளத்தாக்கில் பெரும் கொள்ளை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதனைக் கேள்வியுற்ற மறுகணமே வி.பி.சிங் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து வெளியேறினர்.

அப்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பதவி விலக வேண்டாம் எனக் கேட்கப்பட்டபோதும் தான் “”ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் மனித விழுமியங்களுக்கும் பொறுப்பு உள்ளவனாக இருக்கிறேன்”” என்று கூறியே பதவியைத் துறந்தார். இவ்வாறு இந்திய அரசியல் ஜனநாயகத்தில் மூன்று முக்கிய முன்னுதாரணங்களைக் கூற முடிகின்றது. ஆசியாவின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன பாகிஸ்தானிய அரசியலிலும் இத்தகைய ஜனநாயக முன்னுதாரணங்களைக் காணமுடியும்.

1965 இந்தியப் பாகிஸ்தானிய எல்லைப் பகுதி யுத்தத்தின்போது பாகிஸ்தானின் தோல்விக்குப் பொறுப்பேற்று அயூப்கான் தனது ஜனாதிபதி பதவியைத் துறந்தார். அவ்வாறே பாகிஸ்தானிய ஜனாதிபதியாக இருந்த ஜெஹியாகான்1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதனால் அந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தன் ஜனாதிபதி பதவியைத் துறந்தார். இவ்வாறு இந்திய உபகண்டத்தில் இந்தியாவில் மூன்று அமைச்சர்களும், பாகிஸ்தானில் இரண்டு ஜனாதிபதிகளும் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகி இருக்கிறார்கள்.

இத்தகைய செயல்கள் இந்தப் பிராந்தியத்தின் ஜனநாயக முறைமைக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் ஜனநாயக அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறன என்பதை இங்கே நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இந்தப் பிராந்தியத்தின் ஜனநாயக மீட்சிக்கும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும், ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் நல்ல முன்னுதாரணங்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்ற பிரதமர்கள் அமைச்சர்கள் என்ற வரிசை மிக நீண்டது. இத்தகைய ஜனநாயக பண்புகள் தமிழ் அரசியல் பரப்பில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இத்தகைய ஜனநாயக முறைமை என்ற ஒரு பண்பியல்பை தமிழ் அரசியல் வாதிகளின் மனதில் புகுத்தப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுக்கால ஈழத்தமிழ் அரசியல் செயல்முறையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை இனங்காட்டி ஜனநாயகவாதிகளாகக் கூக்குரலிடும் தமிழரசுக் கட்சியின் முதன்மை தலைவர்கள் தாம் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர் தாயக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டன.

பௌத்த விகாரைகளுக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டும், யாழ் குடாவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் சட்டத்தின் பெயரால் சுவீகரிக்கப்பட்டதனை தடுப்பதற்கான விதத்தில் இவர்களால் செயல்பட முடியவில்லை என்பது இவர்களுடைய தோல்வியை வெளிக்காட்டி நிற்கின்றது. மேலும் இவர்களுடைய வழிநடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக உடைந்துவிட்டது. கஜேந்திரகுமார் அணி, விக்னேஸ்வரன் அணி, சம்பந்தன் அணி என்ற மூன்று பிரிவினராகத் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டுவிட்டது.

மூன்று பிரிவாகத் தமிழ்த் தேசியத்தை உடைத்துவிட்டு இப்போது தமிழ்த் தேசியத் தளத்தில் இருந்துதான் நாம் பேசுகிறோம் என்று சிறிதும் வெட்கமின்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது களத்தில் சம்பந்தன் அணியில் இருந்த கூட்டமைப்புக்குள் மேலும் இரண்டு பிரிவாக உடைவதற்கான உணர்வுகளும் கூச்சல்களும், சலசலப்புக்களும் வெளிப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் பலம் மேலும் மழுங்கடிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பாரதூரமான பலவீனத்தைச் சந்தித்திருக்கிறது.
அத்தோடு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி என்ற ரீதியில் அது பெரும் சரிவை, தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இப்போது புதிய அரசியலமைப்பு, அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என இவர்கள் கூறுவது முற்றிலும் அபத்தமானது. ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாகாணசபைத் தேர்தல், மாகாண சபைகளை ஒழித்தல் என்பதையே தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் முன்வைத்து “”மக்கள் ஆணையை”” ஜனாதிபதி பெற்றிருக்கிறார்.

எனவே 13ஆம் திருத்தச் சட்டமோ, அல்லது மாகாண சபையோ தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச தீர்வாகத்தானும் இந்த புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக “”ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு மக்கள் “” என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி முறையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது, எனவே அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் தரும் என்று கூறி தமிழ் மக்களைக் காத்திருக்கும்படி கூறுவது ஒரு குற்றச் செயலே.

இத்தகைய குற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் சம்மந்தன், சேனாதிராஜா, சுமந்திரன் ஆகிய மூவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இவர்கள் தமது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்றால் இந்தக் கட்சியில் பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்னே வந்து பொறுப்பேற்பர். அவ்வாறு பொறுப்பேற்பவர்கள் கட்சியைச் சரியான வழியில் வழிநடத்துவர்.தமிழ் அரசியல் பரப்பில் தலைமை தாங்குவதற்குத் தகுந்தவர்கள் யாரும் இல்லை என இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழர்களை வழிநடத்துவதற்கு ஏராளமான ஆளுமை மிக்கவர்களைத் தமிழ்த்தாய் பிரசவித்திருக்கிறாள். அத்தகைய புதிய ஆளுமை மிக்கவர்களை வழிநடத்த வழிவிட்டு, தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிற்கு புதிய இரத்தத்தைப் பாய்ச்சி தமிழ் மக்களுக்கான தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை அளிக்குமாறு இவ்வளவு காலமும் இனத்துக்காக மாண்டுபோன மக்களினதும், மாவீரர்களினதும் பெயராலும் பதவிவிலகிச் செல்லும்படி வரலாறு இவர்களுக்குக் கட்டளையிடுகிறது.
– திபாகரன் –

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!