சர்வதேச போர்க்குற்றச்சாட்டுக்கு விதை தூவியவர் சரத் பொன்சேகா!

விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் வந்த வேளையில் எமது இராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் என கூறி சர்வதேசத்தின் யுத்த குற்றச்சாட்டுக்கான சந்தேக விதையை தூவிய சரத் பொன்சேகா இன்று இராணுவ நலன்கள் குறித்து பேசுகின்றமை வேடிக்கை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை , விசேட கூற்றொன்றை முன்வைத்த வேளையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறினார்.

“எமது ஆட்சியில் இன்று இராணுவத்தின் நலன்கள் குறித்தும், அவர்கள் குடிக்கும் ஒரு வேலை தேநீர் குறித்தும் கேள்வி கேட்கும் சரத் பொன்சேகாதான் அன்று சர்வதேசத்தினால் எமது இராணுவத்தின் மீது போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வேளையில், இராணுவம் போர் குற்றவாளிகள் என கூறிய வேளையில் அதனை நல்லாட்சி அமைதியாக ஏற்றுக்கொண்ட நிலையில், சர்வதேசத்திடம் மண்டியிட்ட நேரத்தில் ஊமை போன்று இருந்தார் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் வந்த வேளையில் எமது இராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் என கூறி சர்வதேசத்தின் யுத்த குற்றச்சாட்டுக்கான சந்தேக விதையை தூவியதும் சரத் பொன்சேகாதான் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே ஏனைய நாடுகளின் பீல்ட் மார்ஷல்களின் தகுதி, அவர்களின் செயற்பாடுகள் என்பவற்றை அறிந்துகொண்டு இனியாவது இலங்கையின் பீல்ட் மார்ஷல் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
நிலவு பிரகாசிக்கும் வேளையில் தான் நரிகள் ஊளையிடும், எனவே அதனை பொருட்படுத்த வேண்டாம் என மிகவும் மதிக்கும் மதகுரு ஒருவர் என்னிடம் அண்மையில் கூறினார். ஆகவே இந்த சபையில் எனக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை நான் கருத்தில்கொள்ளப்போவதில்லை.

நான் பெண்களை மதிக்கும் நபர், ஆனால் சரத் பொன்சேகா பெண்களை அவமதிக்கும் நபர். அவருக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவியை கூட அவர் மதிக்கவில்லை. அதனை பெற்றுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதியையும் அவர் அவமதித்துள்ளார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!