தலிபான்கள் பிடியில் சிக்கித் தவித்த மேலும் 100 இந்தியர்கள் மீட்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதல், ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் வெளியேற்றி வருகின்றன.
    
அந்தவகையில் இந்தியாவும், இந்திய உலக மன்றத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வருகிறது. இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து சிக்கித் தவித்த 565 இந்தியர்களை டெல்லி அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு மக்களவையில் சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த மேலும் 100 இந்தியர்களை இன்று விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்துள்ளனர்.

இந்த விமானத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாராக்களில் இருந்து மூன்று சீக்கிய புனித நூல்கள், காபூலில் உள்ள அசாமி மந்திரில் இருந்து பண்டைய 5-ம் நூற்றாண்டின் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட இந்து மத நூல்களும் இந்தியாவிற்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய உலக மன்ற தலைவர் புனீத் சிங் சந்தோக் கூறியதாவது:-
மத்திய அரசால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு விமானம் இன்று டெல்லிக்கு விரைந்துள்ளது. இதன்மூலம் இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள், இந்து மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஆப்கானிய குடிமக்கள் ஆகியோர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு சோப்தி அறக்கட்டளை மூலம் மறுவாழ்வு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!