அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை : திஸ்ஸ விதாரண

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண (Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதியாக இருந்த போது எம்முடன் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்தார். ஆனால் அவ்வாறான நடைமுறையை நடப்பு அரசாங்கத்தில் காண முடியவில்லை. அதனால் அரசாங்கத்தில் உள்ள குறைப்பாடுகளை எமக்கு சுட்டிக்காட்ட முடியாமல் உள்ளது.

தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் சிரமமப்படுகின்றனர் இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ளன. இவை தொடர்பில் கதைக்க எமக்கு சந்தர்ப்பம் இல்லாமல் உள்ளது.

எனக்கு உறுதியளித்தபடி அமைச்சரவையில் எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. நான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆகவே அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கவும் முடியாதுள்ளது.

மக்கள் சிரமத்திற்குள் விழுவதை தடுக்க என்னிடம் பல யோசனைகள் உள்ளன. கோவிட் சமூகத்தில் பரவலடையும் போது அதனை தடுக்க பிரத்தியேக வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அது தொடர்பான எனது ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனது ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருக்குமானால் நிலைமை கடினமாய் இருந்திருக்காது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!