”சமப்படுத்தும் ராஜதந்திரம்” இந்தியாவையும் சீனாவையும் திருப்திப்படுத்துமா?

இந்தியாவையும் சீனாவையும் “சமநிலைப்படுத்தும் ராஜதந்திர” செயற்பாட்டை இலங்கை செயற்படுத்தியுள்ளது.

வழமையாக இந்த கைங்கரியத்தை இலங்கை செய்து வந்தபோதிலும் அண்மைக் காலமாக சீனாவுக்கு எதிரான போக்கை இலங்கை அரசாங்கம் கடைபிடிக்க வேண்டியேற்பட்டது.

இதற்கு இலங்கையின் அரச அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது.
அந்த அதிகாரிகள் சேதனப்பசளைகளில் தொற்று இருப்பதை உறுதியுடன் அறிவித்த நிலையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. ஒரு

கட்டத்தில் சீனாவின் கோரிக்கையை ஏற்று இலங்கையின் அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு மூன்றாம் தரப்பிரின் ஆய்வுக்காக சீனாவின் பசளைகளை அனுப்புவதற்கும் இலங்கை உடன்பட்டது.
எனினும் பின்னர் உள்நாட்டின் அரசியல் எதிர்ப்புகளால் அரசாங்கத்தினால் அந்த முனைப்புக்கு செல்லமுடியவில்லை.

இந்தநிலையில் சேதனப் பசளைகள் தொடர்பில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வந்த முறுகலுக்கு இலங்கை அரசாங்கம் தற்போது தீர்வை அறிவித்துள்ளது.
இதன்படி 6.7பில்லியன் அமரிக்க டொலர்களை சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்துக்கு செலுத்த இலங்கை உடன்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று உள்ளதாக கூறப்பட்ட சேதனப்பசளைகளை மீண்டும் சீனாவுக்கு எடுத்துச்சென்று தொற்று நீக்கிய பசளைகளை இலங்கைக்கு எடுத்து வரவேண்டும் என்ற கோரிக்கையும் இலங்கை அரசாங்கத்தினால் சீன நிறுவனத்திடம் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
எனவே சீனாவுடன் ஏற்பட்ட ராஜதந்திர முறுகலை தீர்த்து விட்ட பெருமூச்சை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கேட்கமுடிகிறது.

ஏற்கனவே இந்தியாவுடன் தற்போது நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் இந்த சேதனப் பசளை முறுகல் காரணமாக சீனாவில் இருந்து சில எதிர்பார்ப்புக்களை கோரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

எனினும் தற்போது சேதனப்பசளை விடயத்தின் முறுகல் தீர்க்கப்பட்டுள்ளமையால், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் உதவிகளை எதிர்பார்க்கும் செய்திகளை விரைவில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இதேவேளை இந்த உதவிகளை சீனாவிடம் இலங்கை எதிர்பார்க்கின்றபோது அதற்கு இந்தியாவின் நிலைப்பாட்டையும் அனுசரித்துப் போகவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இது இலங்கை தமது இறைமைக்கு அப்பால் சர்வதேசத்தின் பிடியில் சிக்கித் தவிப்பதையே உணர்த்துகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!