நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதற்கு மறைமுக காரணம்!

ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்தமைக்கு பின்னால் ஏதாவது மறைமுக காரணம் இருக்கவேண்டும். என்ன காரணம் என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
   
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்ற அமர்வை நிறுத்தி வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்றன அமர்வை நிறுத்தி புதிய அமர்வை கூட்டமுடியும். அதனடிப்படையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் நிறைவுறுத்தப்பட்டிருக்கின்றது.

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வு இவ்வாறு ஜனாதிபதியால் நிறைவுறுத்தினால், பாராளுமன்றத்தின் அனைத்து செயற்குழுக்களும் செயலிழக்கப்பட்டுவிடும். பாராளுமன்றம் கூடிய பின்னர் மீண்டும் அந்த குழுக்களுக்கு புதிதாக தலைவர் உட்பட உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும்.

அத்துடன் கடந்த காலங்களிலும் நாட்டில் இருந்த ஜனாதிபதிகள் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நிறுத்தி இருக்கின்றது. இவ்வாறு நிறுத்தப்படும்போது அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கும். அதன் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷ்வும் தற்போது பாராளுமன்ற அமர்வை நிறுத்தி இருக்கின்றார்.
திடீரென இந்த முடிவுக்கு வருவதற்கான காரணம் என்ன என்பது இறைவனுக்குத்தான் தெரியும். என்றாலும் இதற்கு பின்னால் ஏதாவது முக்கிய காரணம் இருக்கலாம். எவ்வாறு இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியால் நிறுத்தப்படுவதன் மூலம் விசேடமாக கோப் மற்றும் கோபா குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளும் செயலிழக்கப்படுவதுடன் அதன் விசாரணைகளும் செயலிழக்கப்படும்.

மேலும் நாங்கள் இந்த அரசாங்கத்தின் பங்காளி கட்சி. என்றாலும் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எங்களுடன் கலந்துரையாடுவதில்லை.

அமைச்சரவையில் நாங்கள் இல்லை. அதனால் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுக்கும்போது அதனை சுட்டிக்காட்டவும் எமக்கு முடியாமல் இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!