தமிழகத்திற்குள் புகுந்தது ஒமைக்ரான்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
    
நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் பாதிப்பா? என்பதை தெளிவுபடுத்த உடனடியாக அவரது மாதிரியை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கும் மரபியல் மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த 7 பேரும் கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரபியல் மாற்றம்
இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து வந்தவருடன், தொடர்புடையவர்கள் என்ற வகையில் வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவருக்கும் மரபியல் மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரும் கிங் ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இந்த 8 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனே, பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.

ஒமைக்ரான் பாதிப்பு உறுதி
இந்த நிலையில் மத்திய அரசின் ஆய்வக முடிவுகள் எங்களுக்கு வந்துள்ளன. இதில் நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளார். இதனால் அவருக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினர் 6 பேர் மற்றும் தொடர்புடையவர் ஒருவர் என மொத்தம் 7 பேரின் மாதிரிகள் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. இவர்களுக்கு இருமல், சளி, லேசான காய்ச்சல் உள்ளிட்டவை மட்டுமே இருக்கின்றன. அவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!