”நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் ஒரு நிமிடம் கூட அரசுடன் இருக்க மாட்டேன்”

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் ஒரு நிமிடம் கூட அரசாங்கத்தில் இருக்க போவதில்லை எனவும் நாணய நிதியத்திடம் கடனை பெறுவது குழு தலைமுறைகளுக்கு இடி விழும் செயல் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அரசாங்கம் கடனை பெறுவது நாட்டுக்கு சாதகமா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் என்பது ஒரு நாட்டுக்கு செய்வதற்கு வழியேதும் இல்லாத நேரத்தில் இறுதியாக செல்லுமிடம். அப்படி செல்லும் எந்த நாடாக இருந்தாலும் அது பலவீனமாகவே இருக்கும்.

அப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் நாட்டுக்கும் இடையில் ஏதேனும் கொடுக்கல், வாங்கல் நடந்தால், அது நாணய நிதியத்தின் கொள்கைக்கு அமையவே நடக்கும்.

நாணய நிதியத்தின் முதலாவது கொள்கை அனைத்து அரச வளங்களையும் தேசிய அல்லது சர்வதேச தனியார் நிறுவனங்கள் கொள்வனவு செய்ய இடமளிப்பது. இரண்டாவது நாட்டின் நலன்புரிய நடவடிக்கைகளுக்காக செலவிடும் நிதியை குறைத்தல்.

மூன்றாவது தேசிய உற்பத்திகளை பாதுகாப்பதற்காக அனைத்து இறக்குமதிகளையும் கைவிடல். சர்வதேச நாணய நிதியத்திடம் இவ்வாறு பல நிபந்தனைகள் உள்ளன. இதில் பாரதூரமான நிபந்தனை என்னவெனில் ரூபாயின் பெறுமதியை சாதாரண சந்தையில் தீர்மானிக்கும் வகையில் இடமளிப்பது.

இவை அனைத்தையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், அவை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் கெடுதிகள்.

அப்படியானால் மாற்று வழி என்னவென்று ஒருவர் கேட்கலாம். தற்போது எமக்கு இருக்கும் முதலாவது பிரச்சினை டொலர் பற்றாக்குறை.

இதற்கு தீர்வாக நாம் தற்போது நட்பு நாடுகளுடன் மேற்கொண்டு வருவது போல் கைமாற்று உடன்படிக்கைகளை செய்ய வேண்டும்.

டொலர் வருமானம் வரும் வரை இந்த தற்காலிக உடன்படிக்கைகளை செய்ய வேண்டும். கூடிய விரைவில் எமது சுற்றுலாத்துறை முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. அப்போது டொலர் வருமானம் கிடைக்கும்.

மறுபுறம் நாம் மாதாந்தம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் பெறுமதியானது ஒரு பில்லியன் டொலர்களை தாண்டும். எமது வெளிநாட்டு ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்து வருகிறது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!