ரஞ்சனை விடுதலை செய்யுங்கள்! – அரசிடம் சஜித் கோரிக்கை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று (20) காலை ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திக்க சென்ற நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ரஞ்சன் ராமநாயக்க திருட்டு அல்லது தவறான நடத்தைக்காக சிறையில் அடைக்கப்படவில்லை, அவர் எப்போதும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர்.

சீனி, தேங்காய் எண்ணெய், எரிவாயு, உரம் போன்ற மோசடிகளில் ஈடுபட்ட அனைவரும் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், மக்கள் சார்பாக உண்மையைப் பேசிய ரஞ்சன் ராமநாயக்க மட்டுமே சிறையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற ஒன்றியம் கூட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், எதிர்க்கட்சி என்ற ரீதியில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு தாம் ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

எனினும், அவர் இன்னும் சிறையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!