அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க நேரிடும்! – அமைச்சர் எச்சரிக்கை

யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக தற்போதைய பிரேரணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடுகிறோம். கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், கூட்டுப் பொறுப்பில் சிக்கல் இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டும்.

இது குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் தனித்தனியாக கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், நாம் அளிக்கும் வாக்கு தீர்மானத்திற்கு எதிராகவே அமையும்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடி செல்ல மாட்டோம், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடுவது என்பது இந்த வேளையில் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று என திரு பசில் ராஜபக்ச அமைச்சரவையில் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.

இறக்குமதியை கட்டுப்படுத்துவதே எங்கள் முன்மொழிவு. ஆனால், இறக்குமதியை கட்டுப்படுத்தக் கூடாது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!