பட்டம் இழுத்துச் சென்றதால் ஆகாயத்தில் அந்தரித்த இளைஞன்! – கீழே விழுந்து காயம்

வடமராட்சி – புலோலி பகுதியில் இளைஞர்கள் சேர்ந்து பட்டம் ஏற்றிய போது பட்டக்கயிற்றில் வானத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
    
பருத்தித்துறை – புலோலி பகுதியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பட்டம் ஏற்றியுள்ளனர். பல பட்டங்களை தொடுவை முறையில் ஏற்றும் முறையில் ஏற்றிய நிலையில் அதனை கீழ் இறக்க முற்பட்ட போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

பலர் ஒன்றிணைந்தே பட்டக் கயிற்றை இழுத்து பட்டத்தை கீழிறக்க முடியும். அவ்வாறு பல நண்பர்கள் ஒன்றிணைந்து பட்ட கயிற்றை வலித்து இறக்கிய போது எதிர்பாராத விதமாக அவர்களின் கைகளில் இருந்து பட்டக் கயிற விடுபட்டுள்ளது.

குறித்த ஒரு இளைஞன் மட்டும் கயிற்றை விடாமல் பிடித்திருந்த நிலையில் பட்டக் கயிற்றுடன் உயரத்திற்கு தூக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கினார்.

சுமார் நாற்பது அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய குறித்த இளைஞன் பட்டக்கயிற்றில் இருந்து கையை விடுவித்த போது அங்கிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்ட நண்பர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!