‘யூடியூப்’ பார்த்து மனைவிக்கு பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை – எச்சரிக்கை செய்தி!

தமிழகத்தில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். 34 வயது மதிக்கத்தக்க இவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.
    
இந்நிலையில், இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோமதி(28) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவர்கள் கடந்த 13-ஆம் திகதி பிரசவத்திற்கான நாளை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அன்றைய தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்படாத காரணத்தினால், அவர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை.

இதையடுத்து, கடந்த 18-ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரசவ வலி ஏற்பட, லோகநாதன் தனது அக்கா கீதா உதவியுடன் யூடியூப் சேனலை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

அத்துடன் கோமதிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் லோகநாதனை கைது செய்து, தலைமறைவாக உள்ள அவருடைய அக்காவை தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!