‘டெல்மைக்ரான்’ ஆபத்தானது: இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை!

டெல்டா, ஒமைக்ரான் கலவையால் ‘டெல்மைக்ரான்’ என்ற புதிய கரோனாவைரஸ் உருவாகியுள்ளது. இது ஒமைக்ரானைவிட வேகமாக பரவக்கூடியது என்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஞ்ஞானி சஷாங்க் ஜோஷி எச்சரித்துள்ளார்.
    
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக கரோனா வைரஸின் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. புதிய வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி வருகிறது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் அண்மையில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. உலகம் முழுவதும் வியாபித்து பரவியுள்ள டெல்டா வைரஸைவிட, ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் ஒமைக்ரான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி பால் பர்டன் சில வாரங்களுக்கு முன்பு கூறும்போது, “ஒரு நபருக்கு ஒமைக்ரான், டெல்டா ஆகிய இருவகை கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது இரு வைரஸ்களின் கலவையால் புதிய உருமாறிய கரோனா வைரஸ் உருவாகக்கூடும். இது மிக மோசமான வைரஸாக இருக்கக்கூடும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிர அரசின் கரோனா தடுப்பு குழுவின் உறுப்பினரும் மூத்த வைரஸ் விஞ்ஞானியுமான சஷாங்க் ஜோஷி நேற்று முன்தினம் கூறும்போது, “டெல்டா, ஒமைக்ரான் கலவையால் ‘டெல்மைக்ரான்’ என்ற புதிய வகை கரோனா வைரஸ் உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே ஐரோப்பா, அமெரிக்காவில் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.

டெல்மைக்ரான் வைரஸால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சுனாமி போன்று கரோனா அலைகள் ஏற்படக்கூடும். புதிய வைரஸ் ஒமைக்ரானைவிட வேகமாகப் பரவும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பையைச் சேர்ந்த பல்வேறு மருத்துவர்களும் சஷாங்க்ஜோஷியின் கணிப்பை ஆமோதித்துள்ளனர். எனினும் புதிய உருமாறிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!