27 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த விவகாரம்: பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மீது வழக்கு!

ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி 27 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 24ஆம் திகதி, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது 27 புலம்பெயர்வோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
    
தற்போது, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பாரீஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு மனிதநேய அமைப்பான Utopia 56 என்ற அமைப்பு, இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. உயிரிழப்புக்களை தடுப்பதற்கு பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த அமைப்பு அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

தாங்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இரு தரப்பு மீட்புக் குழுவினரிடமும் உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும், அந்த புலம்பெயர்வோர் கைவிடப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் உயிர் தப்பிய இரண்டு புலம்பெயர்ந்தோர், தங்கள் படகு சேதமடைந்து இயந்திரம் பழுதானபோது, தாங்கள் உதவி கோரி அழைப்பு விடுத்ததாகவும், அந்த படகு பிரான்ஸ் கடல் பகுதியிலிருப்பதாக பிரித்தானிய தரப்பும், பிரித்தானிய கடல் பகுதியில் இருப்பதாக பிரான்ஸ் தரப்பும் மாறி மாறி கூறிவிட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!