இக்கட்டான நிலையில் கிறிஸ்மஸ் விழா நம்பிக்கையை வழங்குகின்றது

கோவிட் தொற்று நோயின் தாக்கம், அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், விலைவாசி உயர்வு, இரசாயனப் பசளைகளின் தட்டுப்பாடு என நமது வாழ்க்கை பெரும் சுமையாக மாறியுள்ள இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த கிறிஸ்மஸ் விழா நமக்கு நம்பிக்கையை வழங்குகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
    
கிறிஸ்மஸ் விழாவையொட்டி மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மீண்டுமொரு கிறிஸ்மஸ் விழாவை நாம் எதிர் நோக்கி இருக்கின்றோம். இன்றைய நமது நாட்டின் வாழ்க்கைச் சூழ்நிலை நம் எல்லோருக்கும் நம்பிக்கை அற்றதாக, கவலையளிப்பதாக இருக்கின்றது.
எத்தகைய சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை இழக்காமல் வாழவேண்டும் என்பதையே இந்த விழா நமக்குச் சொல்லித் தருகின்றது.

கோவிட் தொற்று நோயின் தாக்கம், அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், விலைவாசி உயர்வு, இரசாயனப் பசளைகளின் தட்டுப்பாடு என நமது வாழ்க்கை பெரும் சுமையாக மாறியுள்ளது.

இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த கிறிஸ்மஸ் விழா நமக்கு நம்பிக்கையை வழங்குகின்றது. ஆறுதலின் மகிழ்ச்சியின் செய்தியை தருகின்றது.

அதாவது நாம் நம்புகின்ற கடவுள் எங்கோ ஆகாய மேகங்களில் வாழ்கின்ற கடவுள் அல்ல. மாறாக அவர் நம்மோடு வாழுகின்றார். ‘வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடி கொண்டார்’ என்ற இறைவாக்குக்கு ஒப்ப, இயேசுவின் பிரசன்னத்தை உடனிருப்பை ஆழமாக உணருகின்ற கிறிஸ்மஸ் விழாவை நாம் கொண்டாடவுள்ளோம்.

இம்மானுவேல் என்று பெயர் பெற்ற பாலகன் இயேசு ‘கடவுள் நம்மோடு இருக்கின்றார்’ என்ற ஆறுதலின் செய்தியை தனது பிறப்பின் மூலம் மீளவும் இந்நாட்களில் வலியுறுத்துகின்றார். ஆகவே இயேசுவின் வருகை, அதாவது கிறிஸ்மஸ் விழா என்பது நமக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அருளுகின்ற ஒப்பற்ற விழாவாகும்.

விண்ணில் இருந்து விடியல் நம்மைத் தேடி வரும். இந்நாட்களில் நாம் நம்பிக்கையில் தளர்வுறாது தொடர்ந்து செயலாற்றுவோம். ‘ஆண்டவரின் காலத்தில் நீதி தழைத்தோங்கும்’ என்ற திருப்பாடல் ஆசிரியரின் நம்பிக்கையை நமதாக்குவோம்.

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!