சிங்கள மக்களின் தவறான புரிதல்களை களைவதே முக்கியம்!

சமஸ்டி பற்றி சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.
    
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ் தேசிய அரசியலில் சமஸ்டியும், 13ஆவது திருத்தமும் என்ற தலைப்பின் கீழ் கருத்துரை வழங்கிய யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் உரையாற்றும்போது,

சமஸ்டி பற்றி சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கள மக்களுக்கும், எங்களுக்கும் இடைத்தரகர்களாக இருக்கின்ற அரசியல்வாதிகளை நகர்த்திவிட்டு நாங்கள் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேண வேண்டும். எங்களது நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

இதே வேலையை நாங்கள் முஸ்லிம் மக்களுடனும் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை என்று கூறுகின்றோம். ஆனால் இணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு இல்லை. வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்ற மனநிலையோடு தான் நாங்கள் இன்றும் இருக்கின்றோம்.

ஆனால் அந்த மனநிலை முஸ்லிம் மக்களிடம் இல்லை. எங்களோடு இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் முஸ்லிம்களோடு என்ன செய்கின்றோம். முஸ்லிம் மக்களுடனான எங்களின் ஊடாட்டம் எவ்வாறானதாக இருக்கின்றது.

இது தொடர்பில் நாங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. மாகாண சபை முறைமை என்பது அதிகாரங்களை பரவலாக்குவதற்காக உருவாக்கப்பட்ட பொறிமுறை. அதிலும் அரசியல் அமைப்பு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பல முரண்பாடுகளும், சிக்கல்களும் காணப்படுகின்றன.

மாகாண சபைகள் தனித்து சுயாதீனமாக இயங்க கூடிய சூழ்நிலை தத்துவார்த்த ரீதியாகவும், அரசியல் அமைப்பு ரீதியாகவும் இல்லை, நடைமுறையிலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!