குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவேன்:சவால் விடும் அமைச்சர் கெஹெலிய

பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தனக்கு தேவையான பட்டியலை தயாரித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

என் மீது பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததுடன் அது ஊடகங்களில் வெளியானது. அமைச்சர் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அமைச்சருக்கு தேவையான வகையில் பட்டியலை தயாரித்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசியல் தலையீட்டை செய்து, நான் இந்த பட்டியலை தயாரித்தேன் என நிரூபித்தால், நான் மறுநாளே பதவி விலகி விடுவேன் என்று இரண்டாவது முறையாக நான் இன்றும் கூறுகிறேன்.
அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுக்கும் பழக்கம் எனக்கில்லை. முன்னர் அமைச்சில் இருந்தவர்கள் அப்படிசெய்திருக்கலாம், தற்போது அப்படி நடப்பதில்லை என மருத்துவச் சங்க உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

நான் முன்னரும் செய்ததில்லை, இனியும் செய்ய போவதில்லை. நியாயமான அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோமே அன்றி, அவற்றில் தலையிட்டு, எமக்கு தேவையான வகையில் செய்ய போவதில்லை.

நாடாளுமன்றத்தில் இருக்கும் எனது இரண்டு நண்பர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கோரிக்கை விடுத்த போதும், மன்னித்து விடுங்கள் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.

அமைச்சர்கள் இருப்பது இப்படியான வேலைகளை செய்வதற்காக அல்ல. நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் எடுக்கும் கொள்கை ரீதியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவே நாங்கள் இருக்கின்றோம்.

வேறு வேலைகளை செய்வதற்காக நாங்கள் அமைச்சர் பதவியை வகிக்கவில்லை. நியமனங்களையும் இடமாற்றங்களையும் செய்ய நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் குழு இருக்கின்றது.

அநீதிகள் ஏற்பட்டதாக எவரும் இதுவரை குற்றம் சுமத்தியதில்லை எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!