மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்

பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியல் இருந்து ஓய்வுபெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வுபெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்சவுக்கு வழங்க உள்ளதாக நாட்டில் தகவல் ஒன்று பரவி வருவது குறித்து செய்தியாளர் ஒருவர், திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதற்கு பதிலளித்து அமுனுகம,
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஒரு முறை அரசியலில் இருந்த ஓய்வுபெற முயற்சித்தார். நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. மீண்டும் அவர் ஓய்வுபெற முயற்சித்தாலும் அவர், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள்.

இதுதான் உண்மையாக கதை. அவர் விரும்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்காது. மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள்.

நாங்களும் அனுமதி வழங்க மாட்டோம். நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கே இருக்கின்றது. இதனால்,அதற்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டும்.

நான் அந்த துறைக்கு பொறுப்பானவன் இல்லை என்பதால், நாட்டின் நிதி கையிருப்பு குறித்து என்னால், சரியாக கூற முடியாது. நிதி கையிருப்பு குறையலாம்.

எதிர்வரும் பெப்ரவரியில் நாடு வங்குரோத்து அடையும் என்று கூறினார்கள், இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன, பொறுத்து இருந்து பாருங்கள் நாடு வங்குரோத்து அடைக்கின்றதா இல்லை என்று காண முடியும்.

எதிர்க்கட்சிகள் நாடு வங்குரோத்து அடையும் வரை காத்திருக்கின்றன. கனவு காண்கின்றன. கோவிட் அதிகரித்து மக்கள் வீதிகளில் இறக்கும் வரை காத்திருந்தனர்.அது நடக்கவில்லை. தற்போது திறைசேரி காலியாகி நாடு வங்குரோத்து அடையும் வரை காத்திருக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்தும் காத்திருக்குமாறு கூறுங்கள். எமக்குள்ள பிரச்சினை இதுவல்ல. மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது, அதனை குறைக்க வேண்டும்.

மக்களின் வாழ்க்கை செலவை குறைப்பதற்கு நாங்கள் ஒரு திட்டத்திற்கு செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!