ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 61 வயதுடைய ஈரானிய பெண் அகதி!

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்த 61 வயது ஈரானிய பெண் அகதிக்கு 3 ஆண்டு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கி அவரை ஆஸ்திரேலிய அரசு விடுவித்துள்ளது. Masoumeh Torkpour எனும் ஈரானிய அகதி 2011ம் ஆண்டு ஈரானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்ததிலிருந்து தடுப்பில் இருந்திருக்கிறார். பின்னர் 2018ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அவரது மன நலச் சிக்கல்களை கருத்தில் கொண்டு அவருக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட வேண்டும் என அகதிகள் தீர்ப்பாயம் கூறியிருந்தது.

 
அவரது முந்தைய செயல்களை அடிப்படையாகக் கொண்டு குணநலன் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு விசா வழங்க மறுத்த வந்த ஆஸ்திரேலியா, தற்போது அவ்விசாவினை வழங்கியிருக்கிறது.

முன்னதாக, 1991ம் ஆண்டு கனடாவில் இவருக்கு தஞ்சம் வழங்கப்பட்ட நிலையில், இவரது கணவருடன் வேறொரு பெண்ணை கண்டு தாக்கியதற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கிறார். இதனால் கனடாவில் நிரந்தர விசா இவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஈரானில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தையை பார்ப்பதற்காக மகனை கனடாவிலேயே விட்டுவிட்டு 2005ம் ஆண்டு ஈரானுக்கு சென்றிருக்கிறார்.

ஈரானிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியதற்காக ஈரானிலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறார். இதன் அடிப்படையிலேயே அவருக்கு ஆஸ்திரேலியாவிலும் முன்பு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாவில் விடுவிக்கப்பட்டுள்ள Torkpour ஆஸ்திரேலிய சமூகத்தில் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகிறது.
தற்காலிக விசாக்களில் உள்ள பெண்கள் பல்வேறு சொல்லண்ணா துயரத்திற்கு ஆளாவதாக கூறுகிறார் தஞ்சம் கோரிக்கையாளர் வள மையத்தின் ஜன பவேரோ.
“வேலைச் செய்வதில் பல்வேறு தடைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். தங்குவதற்கு வீட்டை கண்டறிவதில் பெரும் துயர் படுகின்றனர். சுரண்டலுக்கு ஆளாகின்றனர்,” என தற்காலிக விசாவில் உள்ள பெண்களின் நிலை குறித்து பவேரோ குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!