அமைச்சர் விமலுடன் இரகசிய சந்திப்பு? – ஜேவிபி வெளியிட்ட தகவல்

அமைச்சர் விமல்  வீரவன்சவுடன் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் செய்தியை மக்கள் விடுதலை முன்னணி (JVP) மறுத்துள்ளது.

அந்த கட்சியின் ஊடகப் பிரிவு இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது.
ஊழல் மிக்க ஒருவருடன், ஊழல் அற்ற எதிர்கால ஜேவிபி அரசாங்கம் எவ்வாறு பயணிக்கும் எனவும் அந்த கட்சியின் ஊடகப்பிரிவு கேள்வியெழுப்பியது.

கட்சி – கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவது மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையல்ல. தேசிய மட்டத்தில் கட்சிகளின் கடைநிலை ஆதரவாளர்கள் தம்முடன் இணைந்துகொள்ள முடியும் என்பதே தமது கொள்கையாகும் எனவும் ஜேவிபியின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவர் ஒருவருக்கும் இடையில் மிக இரகசியமான பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த சந்திப்பு மிகவும் இரகசியமான இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து உறுப்பினர்கள் இந்த நேரத்தில் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என அந்த கட்சியின் கே.டி. லால்காந்த மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து ஜேவிபியின் ஊடகப்பிரிவை எமது செய்தி சேவை தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!