தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தென் தமிழக மாவட்டங்களில் கடற்கரை பகுதியில் 3.6 கி.மீ உயரத்தில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
   
2 மேலடுக்கு சுழற்சிகள்
வங்க கடலை ஒட்டிய இலங்கை பகுதியில் 1 கி.மீ. உயரம் வரை மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வறண்ட வானிலை
இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். இதேபோல் நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் மேகமூட்டம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சென்னையில் மிக அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகக் கூடும். குமரிக் கடல், மன்னார் வளைகுடா வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.

தென்தமிழகத்தில் மழை
வங்கக் கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சில நாட்களுக்கு முன்னதாக வட தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்தது. அந்த காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. நேற்று தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும் , வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!