காஷ்மீரில் தாக்குதல்களை முன்னெடுக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களை வழங்குகிறது:

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களை வழங்குகிறது என்ற தகவலானது அழைப்புகளை இடைமறிப்பு செய்து ராணுவம் கேட்டதில் தெரியவந்து உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி செய்கிறது, பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்பாடுகளை தாரளமாக அனுமதிக்கிறது என்பதற்கு இந்த இடைமறிப்பு தகவல்கள் மறுக்கமுடியாத மற்றும் வலுவான தகவலாகும்.

கடந்த சில மாதங்களில் காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி வேட்டையில் 90க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதலை முன்னெடுக்க ரசாயன ஆயுதங்கள் பயனுள்ளதாக இருக்கும் என பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டு உள்ளது. பாதுகாப்பு படையால் இடைமறிக்கப்பட்ட உரையாடல் தகவலின்படி, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கையில் இப்போது ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். முதல்கட்டமாக பாதுகாப்பு படைகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சுட்டுவீழ்த்தி வரும் நிலையில் திருப்பி அடிக்கும் விதமாக பயங்கரவாத இயக்கங்கள் ரசாயன ஆயுதங்களை ஒரு முக்கிய ஆயுதமாக பார்க்கின்றனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து செயல்படும் பயங்கரவாத கமாண்டர்களின் அழைப்புகள் இடைமறிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்று உள்ளதாக ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. ரமலானுக்கு பிறக்கு ரசாயன தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகளை வேட்டையாடிவரும் இந்திய படைகளுக்கு ரசாயன ஆயுத பதிலடி அதிர்ச்சியை கொடுக்கும் என பயங்கரவாத இயக்கங்கள் நம்புகின்றன. “நாங்கள் பாகிஸ்தானில் இருந்து இன்னும் அதிகமான ஆதரவை பெறப்போகிறோம். எல்லையில் விஷயங்கள் நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு எதிரான நகர்வில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் காலம் வரப்போகிறது,” என இடைமறிப்பு தகவலில் தெரியவந்து உள்ளது. பயங்கரவாத கமாண்டர்கள், “இதுவரையில் இந்திய படைகளுக்கு எதிராக கையெறி குண்டுகளையே விசிவந்து உள்ளோம். மூன்று, நான்கு பேரை கொல்கிறோம், சிலர் காயம் அடைகிறார்கள். இப்போது நம்முடைய திட்டத்தில் மாற்றம் வரக்கூடிய நேரம். நாம் இனி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தப்போகிறோம்…. ஒரே நேரத்தில் அதிக பேரை கொல்லாம் என பேசும் உரையாடல்,” இடைமறிப்பு தகவலில் தெரியவந்து உள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக இப்போது செயல்பட்டு வருகிறது. இப்போது 200 பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திங்கள் அன்று அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags: