எதிர்ப்புகளுக்கு பணித்தது ஏற்பாட்டுக் குழு – வல்வை பட்டத் திருவிழா ரத்து!

தைப்பொங்கல் நாளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    
வருடா வருடம் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறை அரசாங்க அனுசரணையுடன் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். இதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பட்டத் திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!