உள்ளிருந்து எதிர்ப்பவர்களுக்கு இதே கதி தான் ஏற்படும்!

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவிற்கு நேர்ந்த கதியே நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
    
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திற் கொண்டு கண்டி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பக்தர்களுக்கான மத்திய நிலையத்தையும்,கண்டி நகரின் அபிவிருத்தி பணிகளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 8ஆம் திகதி மக்கள் பாவனைக்கான திறந்து வைக்கப்படவுள்ளன.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களை கட்டம் கட்டமாக செயற்படுத்தியுள்ளது.

பால்மா,எரிவாயு சிலி;ண்டர், மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் வரிசையில் நிற்பதை பெரிதுப்படுத்தி அதற்கு முக்கியத்தும் வழங்கிய ஊடகங்கள் மக்களுக்கு வழங்கவுள்ள நிவாரணம் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.

எரிபொருள்,வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்த கூடாது என போக்குவரத்து அமைச்சு பேருந்து உரிமையாளர்களுக்கு விதித்த நிபந்தனைகளுக்கு அமையவே தற்போது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி வரை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது.புகையிரத சேவையின் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சியினரை காட்டிலும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்தில் குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.தவறுகளை சுட்டிக்காட்டும் விதத்திற்கு அப்பாற்பட்டு சென்றதால் அவரது இராஜாங்க அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் தீர்மானம் சிறந்தது. அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவிற்கு நேர்ந்த கதியே நேரிடும்.அரசாங்கத்திற்குள் இரட்டை கொள்கைகளை செயற்படுத்த முடியாது.
அரச வரபிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒன்றினைந்து செயற்பட முடியாவிடின் தாராளமாக வெளியேறலாம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சி அல்ல என்பதை பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன்.சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன ஒன்றினைந்ததால் தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன கூட்டணியுடன் ஒன்றினையாமலிருந்திருந்தாலும் எம்மால் வெற்றிப் பெற்றிருக்க முடியும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்ததால் தான் 14 ஆசனங்களாவது அவர்களுக்கு கிடைக்கப் பெற்றது. இனிவரும் தேர்தல்களில் சுதந்திர கட்சி தாராளமாக தனித்து போட்டியிடலாம்.அப்போது மக்களாணை குறித்து அவர்கள் நன்கு விளங்கிக் கொள்வார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எந்நேரத்திலாவது அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி வெளியேறுவார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.ஏனெனில் 2015ஆம் ஆண்டு காலத்தில் அப்பம் உண்டு செய்த விடயங்கள் இன்றும் நினைவில் உள்ளது.வெளியேறுவதற்கு முன்னர் வெளியேற்றப்படுவது சிறந்தது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!