திடீரென சுசிலின் பதவியை ஏன் கோட்டாபய பறித்தார்? பின்புலத்தில் நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கிடைத்த அரச புலனாய்வு பிரிவின் அறிக்கையின் பிரகாரமே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் மாத்தளை பகுதியில் ஆற்றிய உரை முற்றிலும் தவறானது.

அரச புலனாய்வு பிரிவினர் தேசிய பாதுகாப்பு, அரசியல் நிலைமை உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் அரச தலைவருக்கு அறிக்கை ஊடாக அறிவிப்பார்கள். அரச புலனாய்வு பிரிவினரது அறிக்கையின் பிரகாரமே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது செயற்பாடுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டுள்ளன. மாற்று அரசியல் கூட்டணியை உருவாக்க தயார் நிலையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு அப்பம் சாப்பிட்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதை போன்று தற்போது புதியமாற்று சக்தியை உருவாக்க அரசாங்கத்தை விமர்சிக்கிறார்.

புதிய அரசியல் கூட்டணிக்கு சுதந்திர கட்சியை தலைமைத்துவமாக்க அரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்படுகிறது. சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் வீழ்ச்சிக்கு பொறுப்பு கூற வேண்டும்.

சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்ததன் காரணமாகவே அக்கட்சிக்கு மக்கள் குறுகிய ஆதரவினையாவது வழங்கினார்கள். அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகளுடன் சுதந்திர கட்சியினர் ஒன்றிணைகிறார்கள். பாதகமான செயற்பாடுகள் அல்லது பெறுபேறுகளை ஜனாதிபதி மீது முழுமையாக பொறுப்பாக்குகிறார்கள்” என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!