அமெரிக்காவில் பற்றி எரிந்த குடியிருப்பு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் கருகி பலி!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    
தகவலையடுத்து காலை சுமார் 6.45 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஏறக்குறைய 50 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் கருகி பலியானதாக பிலடெல்பியா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர்களின் அடையாளம் மற்றும் வயது உள்ளிட்டவை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி குறித்த தீவிபத்தில் சிக்கிய 8 பேர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் மட்டும் 18 பேர்கள் குடியிருந்து வருவதாகவும், இதுவே அதிக எண்ணிக்கை என நகர நிர்வாகிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4 தீ கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்துள்ளன. அவை வேலை செய்யாததே இறப்புகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!