யாழ். கோட்டையில் முகாமிடும் சிறிலங்கா படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

யாழ். கோட்டைக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு, 6 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களம் வழங்கியுள்ளது.

மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்றான யாழ். கோட்டையை, சிறிலங்கா படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்கிய அனுமதிக்கு எதிராகவும், கோட்டையில் மீண்டும் சிறிலங்கா படையினர் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராகவும், தொல்பொருள் திணைக்களம் மற்றும், சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராகவும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!