பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை – ரொபர்ட் ஓ பிளக்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை மீட்பதற்கு முயற்சித்ததாக செய்யப்படும் பிரச்சாரங்கள் வெறும் கற்பனையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அமெரிக்க தாக்கி அழித்தது என்ற தகவல் பொய்யானது எனவும், எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நிலைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை இலங்கைக் கடற்படையினருக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கற்பனைகள் வதந்திகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் தாமே இலங்கையில் தூதுவராக கடமையாற்றியதாகவும், காலத்திற்கு காலம் வெளியாகி வரும் கற்பனை கதைகள் பிழையான தகவல்கள் பற்றி தெளிவளிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனை மீட்கும் நோக்கில் ஆயிரக் கணக்கான இடம்பெயர் மக்களை புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற்ற முயற்சித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவும் எவ்வித நோக்கமும் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறெனினும் அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு கடுமையான முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் உள்ளகப் பொறிமுறைமைக்கே அமெரிக்கா முன்னுரிமை வழங்கியதாகவும், இதன் ஓர் கட்டமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானமொன்றை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு தேர்தல் இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என ரொபர்ட் ஓ பிளக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,